திருநாங்கூரில் பன்னிரு ரிஷபாரூட காட்சி
மயிலாடுதுறை: திருநாங்கூரில் நடைபெற்ற பன்னிரு ரிஷபாரூட காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, மதங்காஸ்ரமம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய திருநாங்கூர் கிராமத்தை சுற்றிலும், பாடல்பெற்ற, பழைமை வாய்ந்த 12சிவாலயங்கள் உள் ளன. இந்த தலத்தில் மதங்க மகரிஷியின் மகளாக அம்பாள் பிறந்து, வளர்ந்து வந்ததாகவும், மாதங்கினி என்ற பெயரில் அவரை இறைவன் திருமணம் புரிந்ததாகவும் வரலாறு கூறுகின்ற ன. இதனையொட்டி மதங்க மகரிஷிக்கு பன்னிரு மூர்த்திகளும் திருமணக்கோலத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் வித மாக, 12சிவாலயத்தில் இருந்து சுவாமிகள், நாங்கூருக்கு எழுந்தருளி, திருமணக்கோலத்தில், ரிஷபாரூடராக காட்சி அளிக்கும் திருவிழா நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு திருநாங்கூர் ஸ்ரீ மதங்கீஸ்வர சுவாமி, ஸ்ரீ அமிர்தபுரீஸ்வர சுவாமி, ஸ்ரீ நம்புவார்கன்பர் சுவாமி, ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி, திருக்காட்டுபள்ளி ஸ்ரீ ஆரண்ய சுந்தரேஸ்வர சுவாமி, திருயோ கீஸ்வரம் ஸ்ரீ யோகநாத சுவாமி, காத்திருப்பு ஸ்ரீ சொர்ணபுரீஸ்வர சுவாமி, செம்பதனிருப்பு ஸ்ரீ நாகநாத சுவாமி, திருமேனிக்கூடம் ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமி, பெருந்தேட்டம் ஸ்ரீ ஐராவதேஸ்வர சுவாமி, அன்னப்பன்பேட்டை ஸ்ரீ கலிகாமேஸ்வர சுவாமி, ரயனிபுரம் ஸ்ரீ நயனவரதேஸ்வர சுவாமி ஆகிய 12 திருத்தலங்களில் இருந்து சுவாமிகள், திருநாங்கூர் ஸ்ரீ நம்பு வார் கன்பர் சுவாமி கோயிலில் எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவு பன்னிரு மூர்த்திகளுக்கும் ஒரேநேரத்தில் திருக்கல்யாணம் நடை பெற்றது. இதனையடுத்து பன்னிரு மூர்த்திகளும், அம்பாளுடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீ மதங்க மகரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம் பாள்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு வீதியுலாக்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நமச்சிவாயா என கோஷமிட்டு சுவாமி, அம்பாளை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். விழா ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.