23 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற குதிரை எடுப்பு விழா
செக்கானுாரணி: ஆ.கொக்குளம் ஆறு பங்காளிகள் கொண்டாடும் எருது கட்டு திருவிழா, குதிரை எடுப்பு திருவிழா 23 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்று வருகிறது. நேற்று குதிரை எடுப்பு விழா நடந்தது.
செக்கானுாரணி அருகே ஆ.கொக்குளம், சிக்கம்பட்டி, தேன்கல்பட்டி, ஊர்களை சேர்ந்த பங்காளிகள் வழிபடும் எருதுகட்டு, குதிரை எடுப்பு விழா ஜூன் 3ல் துவங்கியது. நேற்று வழக்கப்படி கே.பாறைப்பட்டி சென்று அந்தந்த ஊருக்கு பாத்தியப்பட்ட பட்டத்து குதிரைகள் மற்றும் சம்பந்தப்பட்ட 21 பரிவார தெய்வங்களையும் மந்தைக்கு எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று மாலை 4:00 மணியளவில் கே.பாறைப்பட்டியில் இருந்து குதிரைகளையும், பரிவார தெய்வங்களையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மதுரை – தேனி ரோட்டில் குதிரை பாதை பிரிவில் சின்னச்சாமி கோடாங்கி அரிவாள் மற்றும் மேளத்தில் நின்று ஆசி வழங்கினார். பின்னர் கே.பாறைப்பட்டி, கே.பி. ஒத்தப்பட்டி பெரிய பட்டத்து குதிரை பேக்காமன் கருப்பணசாமி கோவிலுக்கும், ஆ.கொக்குளம் சின்னப் பட்டத்து குதிரையும், தேன்கல்பட்டி, -அய்யம்பட்டி சின்னப் பட்டத்து குதிரையும் அய்யனார் சுவாமி கோயிலுக்கும், சிக்கம்பட்டி சின்னப் பட்டத்து குதிரை காணியாளன் முத்தையாசுவாமி கோயிலுக்கும் கொண்டு சென்று சேர்த்தனர். இரவு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. தொடர்ந்து இன்று (ஜூன் 5) பகல் 3:30 மணிக்கு எருது கட்டு நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.