உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து தேர் வீதியுலா!

ஐந்து தேர் வீதியுலா!

திருவிடைமருதூர் - சோழநாட்டு பாடல் பெற்ற திருத்தலம். இடைமருது, மத்தியார்ச்சுனம் எனப் புகழப்படுவது. வடக்கே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் (மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும், தெற்கில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர் (புடார்ச்சுனம்) கடைமருது என்றும் வழங்கப்படும். இவை இரண்டுக்கும் இடையில் இருப்பதால் இது, இடைமருது ஆயிற்று. அர்ச்சுனம் என்றால் மருத மரம். வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். இத்தல இறைவன் மகாலிங்கேஸ்வரர். மருதவனேஸ்வரர், மருதவாணர் எனவும் போற்றப்படுகிறார். இறைவி, பிருகத் சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை, தல விருட்சம் மருத மரம். தீர்த்தம் காவிரி. காருண்ய அமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. தேவாரப் மூவர் பாடல் பெற்ற தலம். கருவூர்த்தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் பாடல்களிலும் புகழ்ந்து பாடப்படுகிறது.

நான்கு பிராகாரங்கள், வீதியையும் சேர்த்தால் ஐந்து பிராகாரங்கள். வெளிப்பிராகாரம் பெரிய பிராகாரம், இது அஸ்வமேத பிராகாரம் எனப்படும். இதன் மூலம் சுவாமி அம்பாள் கோயிலை வலம் வரலாம். இப்பிராகாரத்தில் வலம் வந்தால் பேய், பைத்தியம் நீங்கும். இன்றும் இங்கே பிராகார வலம் வந்து பலர் குணமடைகின்றனர். தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும் வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க, இவற்றுக்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார். எனவே, இத்தலத்தை பஞ்ச லிங்கத் தலம் என்பர்.

கோயிலின் உள்ளே பாண்டியன் கோபுரத்தையும் சேர்த்து ஐந்து ராஜகோபுரங்கள். இங்கே அம்பிகை மவுனமாக தவம் செய்த மூகாம்பிகை சன்னிதியும், மேரு பிரதிஷ்டையும் தரிசிக்கத் தக்கவை. கோயிலில் 149 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று, அந்நாளில் சுவாமி திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு வர மண் குடங்களே பயன்படுத்தப்பட்டன எனச் சொல்கிறது. புகழ்பெற்ற இக்கோயிலில் நடைபெறும் தைப்பூச விழா சிறப்பானது. அதன் சிறப்பை திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடியுள்ளனர். மறுநாள் தைப்பூச தீர்த்தவாரி. அன்று பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாண தீர்த்தம் என்ற காவிரி தீர்த்தக் கட்டத்தில் எழுந்தருளி ஐராவணத்துறையில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பு. அன்று மதியம் 1.30க்கு மேல் பஞ்ச மூர்த்திகள் தீர்த்தம் கொடுத்தருளும் காட்சியைக் காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது திருவிடைமருதூர் திருத்தலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !