உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார் அடையாளம் காட்டிய ஆசான்!

ஆழ்வார் அடையாளம் காட்டிய ஆசான்!

ஸ்ரீமத் ராமானுஜரின் அவதாரம் நிகழ்வதற்கு முன்பாகவே, கலியின் கொடுமைகளிலிருந்து நம்மைக் காக்க ஒரு மகான் தோன்றுவார் என்று தனது திருவாய் மொழியில் குறிப்பிட்டுள்ளார், நம்மாழ்வார். பொலிக பொலிக பொலிக கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று நம்மாழ்வாரால் ராமானுஜரின் அவதாரம் முன்கூட்டியே உணர்த்தப்பட்டுள்ளது. நம்மாழ்வாரின் அவதாரதலமான ஆழ்வார் திருநகரிக்கு அருகே அமைந்துள்ளதும், நவதிருப்பதிகளில் ஒன்றானதுமாகிய திருக்கோளூரில் அவதரித்தவர், மதுரகவியாழ்வார். நம்மாழ்வாருக்கு முன்பாகவே அவதரித்த இவர், சிறந்த கல்விமானாகவும், திருமாலடியாராகவும் விளங்கியவர்.

இவர் ஒரு சமயம் வடநாட்டுத் தலங்களை தரிசித்து வரச்சென்றார். அயோத்தி ம õநகரில் அவர் இருந்தபோது தென்திசையில் வானத்தில் ஓர் ஒளி தெரிந்தது. அதனைக் கண்ட மதுரகவியாழ்வார் அத்திசை நோக்கிப் பயணத்தை மேற்கொள்ள, அவ்வொளி, ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரத்தை அடைந்து மறைந்தது. புளிய மரப்பொந்தினுள் நம்மாழ்வாரைக் கண்ட மதுரகவியாழ்வார், அவரையே தமக்கு குருவாக ஏற்று, தொண்டு செய்து அவரது உபதேசங்களை பட்டோலைப்படுத்தினார் (ஓலைச் சுவடிகளில் முறையாக எழுதிவைத்தார்). நம்மாழ்வார் தமது முப்பத்திரண்டாம் வயதில் இறைவனுடன் இணைய, மதுரகவியார் அவருக்குத் திருக்கோயில் கட்டி அதில் இருத்திட நம்மாழ்வாரின் திருவுருவம் வேண்டும் என வேண்டினார். தாமிரபரணி நீரைக் காய்ச்சினால் தனது திருவுருவம் கிடைக்கும் என்று நம்மாழ்வார் அவருக்கு அருள, அதன்படியே செய்தார் மதுரகவியார்.
அஞ்சலி ஹஸ்தத்துடன் கூடிய திருவுருவம் ஒன்று, அவருக்குக் கிடைத்தது.

ஆனால் மதுரகவியாரோ, ஆழ்வாரின் திருவுருவம் உபதேசம் செய்யும் அமைப்பில் இருந்திட வேண்டுமென விரும்பி, மீண்டும் வேண்டினார். அப்போது, முதலில் அவருக்குக் கிடைத்துள்ள விக்ரகம் கலியில் பிற்காலத்தில் தோன்றப் போகும் ஓர் மகானுடைய திருவுருவம் என்றும், மீண்டும் தாமிரபரணி நீரைக் காய்ச்சினால் தமது திருவுருவம் கிடைக்கும் எனவும் அருளினார், நம்மாழ்வார். மதுரகவிகள் மீண்டும் தாமிரபரணி நீரைக் காய்ச்ச, நம்மாழ்வாரின் அற்புதமான திருவுருவம் ஒன்று அவர் விரும்பிய அமைப்பிலேயே கிடைத்தது. அந்தத் திருமேனியே தற்போது ஆழ்வார் திருநகரியில் நாம் தரிசிக்கும் நம்மாழ்வார். அவரது திருவுருவுக்கு முன்பாகக் கிடைத்தது ஸ்ரீமத் ராமானுஜரின் பவிஷ்யதாசார்ய திருமேனியாகும். அத் திருவுருவை ஆழ்வார் திருநகரியில் சதுர்வேதி மங்கலத்தில் தனிக்கோயிலில் தரிசிக்கலாம்.

நம்மாழ்வாரால் அடையாளம் காட்டிக் கொடுக்கப்பட்ட ராமானுஜரின் திருமேனி இங்கு வெள்ளை வஸ்திரத்துடன் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. மதுராந்தகத்திலும் ஆழ்வார் திருநகரியில் மட்டுமே ராமானுஜரை வெள்ளை வஸ்திரத்துடன் தரிசிக்கலாம். ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலத்தில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவே மேல்கோட்டைக்குச் சென்றபோது அங்கே சில நாட்கள் அவர் வெள்ளை வஸ்திரத்துடன் (மாறுவேடம்) இருந்ததாக வரலாறு. அதை முன்னிட்டு தற்போதும் அனைத்து வைணவ கோயில்களிலும் சித்திரைமாத ராமானுஜர் அவதார உற்சவத்தில் ஆறாம் திருநாள் குதிரை வாகனத்தில் வெள்ளை சாத்துப்படியுடன் காட்சியளிக்கும் வைபவத்தைக் காணலாம். ராமானுஜரைக் காப்பாற்ற அவரைப்போலவே உடையணிந்து, வேடம் பூண்டு கூரத்தாழ்வான் காட்சியளித்ததை ஸ்ரீபெரும்புதூரிலும், காஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள கூரத்தாழ்வான் அவதார தலத்திலும் தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !