ருசியில்லையே முருகா.. மருதமலை பஞ்சாமிர்தத்தில்!
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் தரமில்லாமல் இருப்பதாக, புகார் கூறும் பக்தர்கள், பழநி பஞ்சாமிர்தத்தை மிஞ்சும் வகையில் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை, பக்தர்கள் கருதி வருகின்றனர். இக்கோவிலுக்கு, பல்வேறு இடங்களில் இருந்தும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவில், பழநிமலை முருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக இருந்து வருகிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறது. இக்கோவிலின் அடிவாரம் மற்றும் மலை மேல் உள்ள கடைகள் ஏலம் விடப்பட்டு, அதன் மூலமும் வருவாய் ஈட்டப்படுகிறது.முருகன் கோவில் பிரசாதம் என்றாலே, அனைவருக்கும் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தான். பழநி முருகன் கோவில், பஞ்சாமிர்தத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பார்கள். ஆனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம், ருசியில்லாமல் இருப்பதாக, பக்தர்கள் குறை கூறுகின்றனர்.பக்தர்கள் சிலர் கூறியதாவது:பிரசாத கடைக்காரர்களால், வாழைப்பழம், கற்கண்டு, நெய், கரும்புச்சர்க்கரை, பேரீச்சம்பழம், ஏலக்காய் போன்ற பொருட்களால தயாரிக்கப்படும் பிரசாதம், பிளாஸ்டிக் டப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது.கோவில் விதிமுறைப்படி, பிரசாதம் தயாரிப்புக்கு ஏலம் எடுத்த கடைக்காரர்கள், தங்கள் கடைகளில், பக்தர்களுக்கு தெரியும்படி, விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.
அறநிலையத்துறையின் விதிப்படி, 500 கிராம் பஞ்சாமிர்தம், 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.ஆனால், இங்கு, 500 கிராமுக்கும் குறைவாக உள்ள பஞ்சாமிர்தத்தை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். விலைப்பட்டியலும் இல்லை.பக்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்க காரணமே, அது கடவுளின் பிரசாதம் என்பதால்தான். அதை, தவறாக பயன்படுத்தக்கூடாது. இதனை கோவில் நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து, கண்காணிக்க வேண்டும். பழநி பஞ்சாமிர்தத்துக்கு இணையாக, மருதமலை பஞ்சாமிர்தத்தின் சுவையும் இருக்கும் படி, கோவில் நிர்வாகமே தயாரித்து வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, இந்து அறநிலைத்துறை துணை ஆணையர் (பொ) மேனகா கூறுகையில், பஞ்சாமிர்தம், தரமில்லாமல் இருப்பதாக, இதுவரை புகார்கள் ஏதும் வரவில்லை. இருப்பினும், இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.கடை நடத்துவதிலும்விதிமீறல் புகார்மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பிரசாதக்கடை, கடந்தாண்டு ஏலத்தின்போது, 43 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மலை மேல் ஒரு பிரசாத கடை வைக்கவே, ஏலம் விடப்பட்டது. விதிமுறைகளை மீறி, இரண்டு இடங்களில், பிரசாதக்கடைகள் நடத்தி வருகின்றனர்.
அதில், ராஜகோபுர படிக்கட்டில், ஒரு கடையும், மடப்பள்ளி படிக்கட்டுகளில், ஒரு கடையும் வைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் உள்ள கடை, பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.பஞ்சாமிர்த தரத்துக்குவேண்டும் உத்தரவாதம்பஞ்சாமிர்தம் ஒரு உணவுப்பொருளாக இருப்பதால், தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். கோவில் பிரசாதம் என்பதால், குழந்தைகள், முதியவர்கள் நம்பி உண்கின்றனர். ஆனால் அதன் பாதுகாப்பு கேள்விக்குரியதாக உள்ளதால், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பக்தர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.