வாழப்பாடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 2 நாளில் மட்டும் 150 திருமணம்
வாழப்பாடி: தான்தோன்றீஸ்வரர் கோவிலில், இரண்டு நாளில் மட்டும், 150க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள, கல்யாண விநாயகருக்கு வேண்டுதல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்தால், நினைத்த காரியம் கைக்கூடும். அதேநேரம், திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையால், மாதந்தோறும், பலர் வேண்டுதல் வைத்து, சிலர், அங்கேயே திருமணங்கள் செய்துகொள்கின்றனர்.
இந்நிலையில், வைகாசி கடைசி முகூர்த்தத்தால், நேற்று முன்தினம், (ஜூன்., 13ல்),80க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. நேற்று (ஜூன்., 14ல்), 70க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. மேலும், சேலம் மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் புதுச்சேரியிலிருந்து பலர் தரிசனம் செய்தனர். இதனால், பேளூர் நகரில், வாடகைக்கு உணவருந்தும் இடம், சிறு திருமண மண்டபங்களில் கூட, உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.