உள்ளம் நெகிழும் உழவாரப்பணிக் குழு
பழநி: மக்கள் சேவையே மகேசன் சேவை என்பர். அப்படின்னா அந்த மகேசனுக்கே சேவை செய்தால் எத்தனை புண்ணியம், இப்படி நினைப்போர், மதுரை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழநி போன்ற புகழ்பெற்ற நகர கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வார்.
கோயில் வளாகத்தை சுத்தம்செய்தல், திருவாசகம் முற்றோதல் நடத்துதல், பிரதோஷ வழிபாடு போன்ற ஆன்மிக வளர்ச்சி பணிகளை ஒருகுழுவாக இணைந்து செய்கின்றனர். இந்த உழவாரப்பணி, ஒரு சிவன்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த பலனை தரும் என்கின்றனர் ஆன்மிகப் பெரியோர்.
அந்தவகையில் பலநூறு ஆண்டுகள் பழமையான, தைப்பூச விழா நடைபெறும் பழநி பெரிய நாயகியம்மன் கோயிலில் ஒரு குழு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தினமும் ராக்கால பூஜை க்கு பூக்கள் கட்டி கொடுகின்றனர். பூஜைப்பொருட்கள், பாத்திரங்களை கழுவி சுத்தம் செய் கின்றனர். வெளியூர் கோயில்களில் இருந்து அழைப்பு வந்தாலும் தெய்வப்பணி செய்ய உடனே ஓடோடுகின்றனர்.
அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா கூறியதாவது: பெரியநாயகியம்மன் கோயில் மண்டபத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தினமும் ராக்கால பூஜைக்கு பூக்கள் கொண்டு வந்து அதனை நாங்களே கட்டியும் தருகிறோம். பூக்களை கடையில் வாங்குவது இல்லை.
பக்தர்கள் விரும்பி கொடுப்பது, வீட்டுத் தோட்டம், சிறுவர் பூங்கா, பாலாறு அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பூக்களை சேகரித்து, மாலையாக தொடுத்து வழங்குகிறோம். அதிகாரிகள், அலுவலர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் ஒத்துழைப்பு தருவதால் இச்சேவையை தொய்வின்றி தொடர முடிகிறது. ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை கோயில்களுக்கும் சென்றுள்ளோம்.., என்றார். இவர்களை வாழ்த்த... 98655 50049.