அமர்நாத் யாத்திரை முதல் குழு கிளம்பியது
ஜம்மு: காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கு வழிபட செல்லும் பக்தர்களின் முதல் கட்ட யாத்திரை குழு இன்று காலை 4 மணியளவில் ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றனர். அதிகாரப்பூர்வமாக நாளை (திங்கட்கிழமை) காஷ்மீரில் இருந்து மலைக்கு அனுமதிக்கப்படுவர். பனி லிங்கம் தரிசிக்க முதல் கட்டமாக புறப்பட்டு செல்லும் குழுவில் 1839 ஆண்களும், 333 பெண்களும், 45 சாதுக்களும், 17 குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர். யாத்ரீகர்கர்களுக்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். மொத்தம் 45 நாட்கள் ஆக.15 வரை இந்த யாத்திரை அனுமதிக்கப்படும்.
1.5 லட்சம் யாத்ரீகர்கள்: அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதுமிலிருந்து 1.5 லட்சம் யாத்ரீகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பாதையிலும் , மற்றொரு பாதையான கந்தர்பால் மாவட்டத்தில் பல்தால் பாதையிலும் யாத்ரீகர்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு ஆணையர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.