நெய்வேத்திய பிரசாதங்கள் சுவை இல்லையே! மனவேதனையில் பக்தர்கள்
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், சுவாமிக்கு அன்றாடம் நெய்வேத்யம் செய்யப்பட்டு அதன் பின் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பிரசாத பொருட்கள் தரமானதாகவும், சுவையில்லாமலும் உள்ளது என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பிரசித்தி பெற்றது காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில். இங்கு அன்றாடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். சுவாமி வழிபாட்டுக்கு பின்பு, கோவில் முன் மண்டபத்தில் கோவில் சார்பில் விற்பனை செய்யப்படும், பிரசாதங்களை பக்தர்கள் வாங்கி சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.கோவிலில், அதிரசம், லட்டு, அடை, முறுக்கு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. சுவாமிக்கு படைக்கப்பட்ட நெய்வேத்யப்பிரசாதம் என்று சொல்லப்படும் இவை, பக்தர்களிடம் காசு பெற்றுக்கொண்டு கொடுக்கும் போது அவை சுவையில்லாமலும், நாள்பட்ட எண்ணெயில் சுட்டு எடுக்கும் போது வீசும் வாசனையை வெளிப்படுத்துவதாகவும், குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் சாப்பிடும் போது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பிரசாத உணவு தயாரித்து விற்பனை செய்வது, பொது ஏலத்தில் விடப்படுவது வழக்கம். லட்டு, அதிரசம், முறுக்கு, அடை ஆகிய நான்கும் பிரசாதம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொன்றும் தலா, 50 கிராம் எடை இருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் பத்து ரூபாயுக்கு அதிகமாக விற்ககூடாது.ஆனால் நான்கு பிரசாதங்களையும் மொத்தமாகவும், தனியாகவும் விற்பனை செய்யலாம்.பிரசாதங்கள் தயார் செய்த தேதியையும், பேக்கிங் செய்த தேதியையும் குறிப்பிட வேண்டும். ஆனால் எப்போது தயார் செய்தது என்ற விபரம் குறிப்பிடவில்லை. மேலும், சுவை குறைவாகவும், தரமில்லாமலுள்ளதாக கோவிலுக்கு வருகை தரும் பல பக்தர்கள் கோவிலில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இது குறித்து பிரசாத விற்பனையாளர்கள் கூறுகையில்,கோவில் வளாகத்தில் உள்ள அறையில் தான் லட்டு, அதிரசம், முறுக்கு ஆகியவை தயார் செய்கிறோம். பக்குவமாக தயாரிப்பதால் சுவையோ, தரமோ இல்லாமிலிருப்பதற்கான வாய்ப்பு இல்லை,என்றனர். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறுகையில்,கோவிலில் விற்பனை செய்யும் பிரசாத உணவுப் பொருளில் சுவையில்லை என, யாரும் புகார் செய்யவில்லை. இருந்த போதும் பிரசாத பொருட்களை சுவைத்துப்பார்த்து அதில் குறை இருந்தால் நிவர்த்தி செய்கிறோம், என்றார்.