உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை 16 முப்பழ அபிஷேகம்

மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை 16 முப்பழ அபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊஞ்சல் உற்ஸவ விழாவை முன்னிட்டு ஜூலை 16ல் மூலஸ்தான சொக்கநாதப் பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை, அபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலின் ஊஞ்சல் உற்ஸவம் ஜூலை 6 முதல் 15 வரை நடக்கிறது. இந்நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளி ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் பெருமானின் திருவாசகத்தின் திருப்பொன்னுாஞ்சல் பதிகம் தல ஓதுவாரால் ஓதப்பட்டு, அதனை நாதஸ்வர வித்வான்கள் ஒன்பது ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து இரண்டாம் பிரகாரம் சுற்றி சேர்த்தியாகும்.

ஜூலை 7 இரவு ஆனி உத்திரம் நடக்கிறது. இரவு 3:00 மணிக்கு வெள்ளியம்பல நடராஜர் சிவகாமி அம்மனுக்கு சுவாமி கோயில் ஆறு கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மன் களுக்கு சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடக்கிறது. பின் கால பூஜைகள் முடிந்து காலை 7:00 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் மாசி வீதிகளில் புறப்பாடாகும். விழாவை முன்னிட்டு அபிஷேகப் பூஜை பொருட்களை பக்தர்கள் ஜூலை 7 இரவு 7:00 மணிக்குள் கோயிலில் வழங்கலாம். ஆகம விதிகளின் படி ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இதன்படி ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஜூலை 16 ல் உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாதப் பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழப்பூஜை, அபிஷேகம் நடக்கிறது.

பக்தர்களின் பூஜைகளை ஏற்றுக்கொண்ட இறைவன் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ அருள்பாலிப்பதாக ஐதீகம். ஜூலை 16 ஆனி ஊஞ்சல் உற்ஸவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கிறது. விழா நாட்களான ஜூலை 6 முதல் 15 வரை கோயில், உபயதாரர் சார்பாக உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !