கட்டளை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
உடுமலை:வனப்பகுதியிலுள்ள கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலை-மூணாறு ரோட்டில், சின்னாறு செக்போஸ்ட் அருகே வனப்பகுதியில், கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, அமாவாசை உட்பட சிறப்பு நாட்களில் மட்டும், பக்தர்களை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.இவ்வாறு, செல்லும் பக்தர்களை சின்னாறு செக்போஸ்ட்டில் இருந்து அழைத்துச் செல்ல, வனத்துறை - மலைவாழ் கிராம மக்கள் இணைந்த குழு சார்பில் கட்டண வாகனங்கள் இயக்கப்படுகின்றன.நேற்று அமாவாசையையொட்டி இக்கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இப்பூஜைகளில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கோவிலை ஒட்டியுள்ள சின்னாற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்துச்சென்றனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதே போல், திரு மூர்த்திமலை அமணலிங் கேஸ்வரர் கோவிலிலும், அமாவாசையையொட்டி, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. குறிப்பிட்ட இடைவெளியில் உடுமலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.