தாம்பரம் தேனுபுரீஸ்வரர் கோவில் குளம் தூர் வாரப்படுமா?
தாம்பரம்:தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில், தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தொல்லியல் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், உலக பண்பாட்டு நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இக்கோவில் அருகே உள்ள பழமை வாய்ந்த குளம், தூர் வாரப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன.
இந்தாண்டு முற்றிலும் வறண்டதால், சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக் கப்பட்டுள்ளது.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஐந்து ஆண்டுகளுக்கு முன், 1 அடி வரை, குளம் தூர் வாரப்பட்டதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பெய்த மழையில், குளத்தில் நீர் தேங்கி, சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டமும், பாதிக்கப்படாமல் இருந்தது.
கடந்த, 2015க்கு பின், மழை அளவு குறைந்ததால், குளத்தில் நீர் தேங்குவது குறைந்ததுடன், இன்று (ஜூலை 3) வரை, குளமும் தூர் வாரப்படாததால், சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குளத்தை, தூர் வாரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகங்கள் கண்டுகொள்ள வில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், தூர் வாரக்கோரி, பேரூராட்சி சார்பில், அறநிலையத் துறைக்கு, சமீபத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள், தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பினர். தொடர்ந்து, குளத்தை தூர் வார திட்டமதிப்பீடு விரைவில் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட உள்ளது என்றனர்.