யதோக்தகாரி பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பங்குனி மாத பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6 மணிக்கு சப்பர உற்சவம், மாலை 6 மணிக்கு சிம்ஹ வாகனம் உற்சவம் நடந்தது. இரண்டாம் நாள் காலை ஹம்ஸ வாகனம், மாலை சூர்ய பிரபை உற்சவம் நடந்தது. மூன்றாம் நாள் காலை 6 மணிக்கு, பிரபல உற்சவமான கருடசேவை, வெகு விமரிசையாக நடந்தது. நேற்று காலை தங்கப்பல்லக்கில், நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் வீதியுலா வந்தார். இரவு யாளி வாகன உற்சவம் நடந்தது. இன்று காலை சப்பரம் (ஸ்ரீவேணுகோபால் திருக்கோலம்), இரவு யானை வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது. ஏழாம் நாள் உற்சவமான, நாளை காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. மறுநாள் 22ம் தேதி பகல் 2 மணிக்கு தொட்டித் திருமஞ்சனம், மாலை குதிரை வாகனம், 24ம் தேதி காலை ஆல்மேல் பல்லக்கு, தீர்த்தவாரி, மாலை வேதசார விமானம், 25ம் தேதி காலை துவாதச ஆராதனம், மாலை வெட்டிவேர் சப்பரம், துவஜாரோஹணம், ஆகியவை நடைபெறும்.