உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

நாமக்கல்: ஏழூர் பெரிய மாரியம்மன் கோவிலில், இன்று (மார்ச் 21) மாலை 4 மணிக்கு, குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த ஏழூர் கிராமத்தில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 6ம் தேதி இரவு, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், காப்பு கட்டுதலும், தினமும் காலை அபிஷேக ஆராதனை, இரவு பூவோடும், சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7 மணிக்கு, வடிசோறு படையல் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு, அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மார்ச் 21) காலை 6 மணிக்கு அக்னி குண்டம் பற்ற வைத்தல், மாலை 4 மணிக்கு குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் தீ குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இரவு 8 மணிக்கு அம்மன் உற்சவம் அலங்காரம், புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். நாளை (மார்ச் 22) காலை 7 மணிக்கு பொங்கல், சிறப்பு அலங்காரமும், மாலை 6 மணிக்கு மாவிளக்கு, அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மார்ச் 23ம் தேதி காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 3 மணிக்கு வண்டி வேஷம், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !