பழநி கோயில் நவபாஷாண சிலையை கடத்த சதி
பழநி: பழநி முருகன் கோயிலின் நவபாஷாண முருகன் மூலவர் சிலையை கடத்த தலைமை ஸ்தபதி முத்தையா சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பின்னணியில் இருந்த முக்கிய நபர்கள் யார் என விசாரணை நடக்கிறது.
போகர் சித்தரால் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை பழநி கோயிலில் மூலவராக வழிபடப்படுகிறது. 2004ல் நவபாஷாண சிலை வலு இழந்து விட்டதாக அதை மறைத்து 200 கிலோவில் ஐம்பொன் உற்ஸவர் சிலை வைக்கப்பட்டது. அதில் தங்கம், வெள்ளி சேர்க்கப்பட்டதில் மோசடி நடந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் குழுவினர் சில மாதங்களுக்கு முன் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக ஸ்தபதி முத்தையா, கோயில் இணை ஆணையர் கே.கே.ராஜா, ஆணையர் தனபால், அறநிலையத்துறை இணை ஆணையர்கள் புகழேந்தி, தேவேந்திரன் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே நவபாஷாண சிலையை கடத்தி வெளிநாட்டில் விற்க சதி நடந்ததா என விசாரணை நடத்தினர்.
இதனால் நவபாஷாண சிலையை மறைத்து ஐம்பொன் உற்ஸவர் சிலையை வைத்ததும், காலப்போக்கில் அதை மூலவராக வைத்து விட்டு நவபாஷாண சிலையை கடத்த சதி செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘நவபாஷாண சிலையை கடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதா என விசாரித்தோம். அது உண்மைதான். ஸ்தபதி முத்தையாவே இந்த திட்டத்தை தீட்டி உள்ளார். அவரை இயக்கியவர்கள் யார் என சாரிக்கிறோம்’’ என்றார். பொன் மாணிக்கவேலிடம் கேட்டபோது ‘‘சிலையை கடத்த சதி செய்த யாரும் தப்ப முடியாது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். இரு நாட்கள் கழித்து மீண்டும் பழநிக்கு வருவேன்’’ என்றார்.