ராமேஸ்வரம் நடராஜர் தியான கோயில் கும்பாபிஷேகம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோசாமிமட நடராஜர் தியான கோயில் சன்னதியில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ராமேஸ்வரம் கோசுவாமி மடம் 2வது நுழைவு வாசலில் நடராஜ ரின் 64 கிரணங்களும் ஓவியமாக வரையப்பட்டு, கட்டடக் கலை மற்றும் ஒளி அம்சத்துடன் ஸ்ரீ நடராஜர் தியான கோயில் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோசுவாமி மடத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு கோபாலகிருஷ்ண கனபாடிகள் தலைமையில் 14 வேத விற்பன்னர்கள் யாக குண்டத்தில் வேள்வி வளர்த்து 14 புனித கலசத்துடன் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்து முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை நடத்தினர். தொடர்ந்து இன்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையில் நடராஜர் முலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி ஹோமம் முடிந்ததும் சிம்ம லக்கனத்தில் காலை 9:45 முதல் 10:15 மணிக்குள் நடராஜர் தியான கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவரும், கோசுவாமி மடம் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், டிரஸ்டிகள் அசோக்கோயல், மனோகர் பஹாடியா, ஆர்.ஆர்.கோபால்ஜி, சசிகுமார் செய்திருந்தனர்.