தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2286 days ago
ஓசூர்: சூளகிரி அருகே நடந்த, பிளேக் அம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படி கிராமத்தில், 17ம் ஆண்டு ஓம் ஆதிசக்தி தொட்டம்மா என்ற பிளேக் அம்மன் திருவிழா, காப்பு கட்டுதல் விழா நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு விரதமிருந்து, காப்பு கட்டியிருந்த பக்தர்கள் இருமுடி செலுத்தினர். தொடர்ந்து தேரோட்டம், கங்கன பூஜை, தீச்சட்டி ஊர்வலம், அக்னி குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு விரதமிருந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று, பூ கரகம், பல்லக்கு உற்சவம், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.