முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
காரைக்குடி: முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மார்ச் 13ல் காப்பு கட்டுதலுடன் பங்குனி திருவிழா துவங்கியது.தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.நேற்று முன்தினம் (மார்ச் 20) காலை 7 மணிக்கு கோயில் கரகம்,மது,முளைப்பாரி உற்சவம் நடந்தது. பாலாபிஷேகம்:பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் காரைக்குடி மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் பக்தர்களும் காப்புக் கட்டி விரமிருந்தனர். நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் எடுத்தல் நடந்தது. முன்னதாக,முத்தாலம்மன் கோயில் ஊரணியில் பக்தர்கள் நீராடி பால்குடம் சுமந்து கோயிலுக்கு சென்றனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சிலர் பூக்குழி,அலகு குத்தி, தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திரு வீதி உலா நடக்கவுள்ளது. சந்தனகாப்பு அலங்காரம்: நாளை (மார்ச் 23) பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 4 மணிக்கு மேல் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. உதவி ஆணையர் ராமச்சந்திரன், கோயில் நிர்வாக அதிகாரி முத்துராமன் ஏற்பாட்டை செய்துள்ளனர்.