ஏழையாக காட்சியளித்த வைகுண்டபதி பெருமாள் கோடீஸ்வரரானார்!
தூத்துக்குடி: ஏழையாக பக்தர்களுக்கு காட்சியளித்து வந்த தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் நேற்று முதல் கோடீஸ்வர பெருமாளாக பக்தர்களுக்கு காட்சிதர உள்ளார். நேற்று நடந்த ஏலத்தில் பெருமாளுக்கு சொந்தமான இடம் 28.50 கோடி ரூபாயிற்கு ஏலம் போனது.தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற கோயில் வரிசையில் வைகுண்டபதி பெருமாள் கோயில் இடம் பெற்றாலும், பெருமாள் ஏழை பெருமாளாக தான் இருந்து வந்தார். இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்டிற்கு முன்பு கோயிலுக்கு சொந்தமான இடம் குத்தகைக்கு விடப்பட்டது. அந்த இடத்தில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக கோர்ட் வழக்கு போன்றவை நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து தீர்ப்பளிக்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வைகுண்டபதி பெருமாள் கோயிலுக்கு புலிப்பாஞ்சான்குளம் பகுதியில் 55 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை மாவட்ட நீதிபதி தலைமையில் ஏலம் விட்டு அதற்குரிய பணத்தை கோயில் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தினமலரில் தொடர்ந்து செய்தி வெளியாகியது. இந் நிலையில் நேற்று மதியம் மிகுந்த பரபரப்புடன் மாவட்ட நீதிபதி பிரபுதாஸ் தலைமையில் பெருமாள் கோயிலுக்குரிய 55 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டது. இதற்காக கோர்ட் வளாக பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்த 17 பேர் மட்டுமே ஏலம் கேட்க உள்ளே சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர அறநிலையத்துறை சார்பில் திருநெல்வேலி நகை சரிபார்ப்பு பிரிவு துணை ஆணையர் முத்துதியாகராஜன், தூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், ஆய்வாளர் நயினார் ஆகியோர் பங்கேற்றனர்.மதியம் 3 மணிக்கு ஒரு ஏக்கருக்கு 20 லட்ச ரூபாயுடன் ஏல கேள்வி துவங்கியது. 48 லட்ச ரூபாய் வரை ஏலம் விறுவிறுப்பாக இருந்தது.
அதன் பிறகு ஏலத் தொகை குறைவான தொகையாக அதிகரிக்கப்பட்டது.இறுதியில் ஒரு ஏக்கருக்கு 51 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயிற்கு ஏலம் போனது. மொத்தம் 55 ஏக்கருக்கு மொத்தம் 28 கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயிற்கு ஏலம் போனது. சென்னையை சேர்ந்த வியாபாரி எம்.எஸ். மூர்த்தி பெருமாள் கோயிலுக்குரிய நிலத்தை ஏலம் எடுத்துள்ளார்.டெபாசிட் நீங்கலாக மொத்த ஏலத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை மூர்த்தி நேற்று கோர்டில் செலுத்தியுள்ளார். மீதித் தொகையை 15 நாளுக்குள் செலுத்துவார். அதன் பிறகு கோர்டில் இருந்து பெருமாள் கோயில் கணக்கிற்கு அந்த பணம் மாற்றம் செய்யப்படும் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அறநிலையத்துறை வட்டாரத்தில் இதுபோன்று மிகப் பெரிய தொகை நூற்றுக்கணக்கான ஆண்டு காலத்திற்கு பிறகு எந்த கோயிலுக்கும் வந்ததில்லை. தூத்துக்குடி பெருமாள் கோயிலுக்கு தான் வந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கில் கோயில் சார்பில் வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜரானார். கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தினமலருக்கு இந்து அறநிலையத்துறை பாராட்டு: பெருமாள் கோயில் நிலத்தை ஏலம் எடுக்க சிலர் சிண்டிகேட் அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சிண்டிகேட் அமைத்திருந்தால் இந்தளவுக்கு ஏல தொகை உயர்ந்திருக்காது. ஆனால் தினமலரில் இது குறித்து செய்தி வெளியாகி, அந்த இடத்தின் நில மதிப்பு குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியூர் வியாபாரிகள் அதிகம் பேர் ஏலத்தில் பங்கு கொள்ளும் நிலை ஏற்பட்டது.இதனால் தான் பெருமாளுக்கு இந்த அளவிற்கு பணம் வந்தது. இதற்கு தினமலர் முக்கிய காரணம் என்று நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தினமலருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.