உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டயபுரத்தில் முத்துசுவாமி தீட்சிதர் ஜெயந்தி!

எட்டயபுரத்தில் முத்துசுவாமி தீட்சிதர் ஜெயந்தி!

தூத்துக்குடி:  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் 238வது ஜெயந்தி விழா, எட்டயபுரத்தில் வரும் 26, 27ல் நடக்கிறது. 1775ல், திருவாரூரில் ராமசாமி தீட்சிதர், சுப்புலட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் முத்துசுவாமி தீட்சிதர். முதலில் தந்தையிடம் சங்கீதம் பயின்ற இவர், பின் சிதம்பரம் நாதயோகியிடம் சீடராகி சங்கீதம் கற்றார். தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஜோதிடத்திலும் வல்லவராக விளங்கினார்.குருவின் அருளால், கங்கையில் இருந்து, "ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட வீணை ஒன்றைப் பெற்றார். இதை தீட்சிதரின் ஆறாவது தலைமுறையினர் பாதுகாத்து வருகின்றனர். திருத்தணி கோவிலில் வயதான ஒருவரைப் போல முருகன் நேரில் தோன்றி, தீட்சிதரின் வாயில் கற்கண்டை போட்டு மறைந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தன் முதல் கீர்த்தனையான, "ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதியைப் பாடினார். திருத்தணி, மதுரை, திருப்பதி உள்ளிட்ட 26 திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியுள்ளார். முருகன், அம்பிகை, சிவன், ராமர் மீது 437 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.எட்டயபுரத்தில் தீட்சிதர், "ஆனந்த அம்ருதகர்ஷினி என்ற கீர்த்தனையைப் பாடி மழையை வரவழைத்தார். 1976ல் இந்திய அரசு, இவரது நினைவாக தபால் முத்திரை வெளியிட்டது. 22 ஆண்டுகளாக சென்னை சரஸ்வதி வாக்யக்கார டிரஸ்ட் நிர்வாகி சுப்பிரமணியன், ஆண்டுக்கு இருமுறை பிரபல வித்வான்களை எட்டயபுரத்திற்கு வரவழைத்து, முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தி வருகிறார். 238வது ஜெயந்தி விழா, மார்ச் 26 காலை, 9மணிக்கு எட்டயபுரம் தீட்சிதர் நினைவு மண்டபத்தில் துவங்குகிறது. நல்லி குப்புசாமி செட்டியார் முன்னிலையிலும், சென்னை தியாக பிரம்ம சபா செயலர் கிருஷ்ணமாச்சாரி தலைமையிலும் விழா நடக்கிறது. மார்ச் 26, காலை 9.30 முதல் 12 மணி வரை சென்னை பாலபிருந்தம் சங்கீத குருகுலம் சார்பாக தீட்சித வைபவ நிகழ்ச்சியும், மார்ச் 27 காலை 9.30 முதல் 12 மணி வரை சீதாராஜன் குழுவினரின் நாதயோகின் நமஹ நிகழ்ச்சியும் நடக்கின்றன. தொடர்ந்து சங்கீதக் கலைஞர்கள் பாடுகின்றனர்.முத்துசுவாமி தீட்சிதர் நினைவு கமிட்டி செயலர் ராஜகோபால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !