ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
ADDED :2279 days ago
சபரிமலை : ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, இன்று(ஜூலை 16) மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும், 21 வரை நெய் அபிஷேகம் நடக்கிறது.
இன்று மாலை, மேல்சாந்தி, வாசுதேவன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து, 18 படி வழி சென்று, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். இதற்கு பின், பக்தர்கள் படி வழி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.நாளை அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்குப் பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு, நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார். எல்லா நாட்களிலும், மதியம் உச்ச பூஜைக்கு முன், களப அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடக்கும். வரும், 21ல், இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.