தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு திருக்கல்யாணம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நேற்று இரவு பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாணம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இது போல் இவ்வாண்டும், நேற்று இரவு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாலை ஆறு மணிக்கு பழங்கள், மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வெற்றிலை சீவல், பூக்கள் உள்ள சீர்வரிசையை பெண்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரகங்கள் முழங்க மாப்பிளை அழைப்பு உட்பட சம்பிரதாய சடங்குகள், ஹோமம் நடந்து முடிந்து பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலாத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அனைவருக்கும் திருக்கல்யாண பிரசாதங்களும், திருமணம் நடக்காத இளம் பெண், ஆண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையை அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. அப்படி அணிவிப்பதால் அடுத்தாண்டு வரும் போது அவர்களுக்கு திருமணம் நடந்தே தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, கோவில் உதவி கமிஷனர் பரணிதரன் உட்பட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.