உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரை மணி நேரத்தில் அத்தி வரதர் தரிசனம்: பக்தர்கள் மகிழ்ச்சி

அரை மணி நேரத்தில் அத்தி வரதர் தரிசனம்: பக்தர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் : காஞ்சியில், அத்தி வரதரை தரிசிக்கும் கூட்டம், நேற்று குறைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் நெரிசலின்றி, அரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

வி.ஐ.பி., தரிசன வழியில், ஆட்களை அழைத்து செல்வோர் குறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கின்றனர். காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், வசந்த மண்டபத்தில், அத்தி வரதரை தரிசனம் செய்வதற்கு, தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்தபடி உள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற மாநிலத்தவரும், மிகுந்த ஆர்வத்துடன் தரிசனம் செய்ய வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கூட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், முதல்வர், இ.பி.எஸ்., கோவிலுக்கு வருவதாக செய்தி வெளியானதால், மக்கள் கூட்டம் குறைந்திருந்தது. அதேபோல, நேற்று காலையில் இருந்து, பொது தரிசனத்தில் சென்றவர்கள், 30 நிமிடங்களில் சுவாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியில், எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர் குடும்பங்கள், அந்த வழியில், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி உள்ளே சென்றனர். இதனால், வி.ஐ. பி.,க்கள் செல்லும் வழியில், தினமும் பிரச்னை, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த வழியில், யார் மூலம், எத்தனை பேர் தரிசனத்திற்கு அழைத்து செல்கின்றனர் என, விபரம் சேகரிக்கப்படுகிறது. இதனால், வி.ஐ. பி.,க்கள் வழியிலும் கூட்டம் குறைந்து இருந்தது. மேலும், நேற்று, மக்கள் கூட்டம் குறைந்ததற்கு காரணம், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், 24ம் தேதி கோவிலுக்கு வருவதாக, சமூக வலை தளங்களில் தகவல் பரவியதால், பலர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்திருக்கலாம் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆடிப்பூரம்: இன்று முதல் ஆடிப்பூரம் உற்சவம்அத்தி வரதர் வைபவம், 1ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்தி வரதர் வைபவம் இடையே, கோடை உற்சவம், ஆனி கருட சேவை, ஆடிப்பூரம், ஆளவந்தார் சாற்றுமுறை, ஆடி கருடசேவை போன்ற உற்சவங்களும் நடைபெறுகின்றன. இன்று, ஆடிப்பூரம் உற்சவம் துவங்குகிறது. இன்று துவங்கும் உற்சவம், ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் புறப்பாடு நடைபெறும். கோவிலில் இருந்து புறப்படும் சுவாமி, ஆஞ்சநேயர் கோவில் வரை சென்று, மீண்டும் கோவிலுக்கு திரும்புவார். ஆடிப்பூரம் உற்சவம் காணவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

துணை ராணுவ பாதுகாப்பு: அத்திவரதர் வைபவத்திற்கு, துணை ராணுவப் படை பாதுகாப்பு மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலை திறக்க கோரி, தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.உயர் நீதிமன்றத்தில், காஞ்சிபுரத்தை சேர்ந்த சீனிவாசன் தாக்கல் செய்த மனு: அத்தி வரதரை தரிசிக்க, லட்சக்கணக்கான மக்கள், தினமும் வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு, முறையான பாதுகாப்பு வழங்காததால், நெரிசலில் சிக்கி, 27 பேர் உயிரிழந்துள்ளதாக, உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால், நான்கு பேர் இறந்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. கூட்ட நெரிசலையும், பொது மக்கள் பாதுகாப்பையும் கருத்தில் வைத்து, துணை ராணுவப் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், அத்திவரதர் வைபவத்திற்காக, வரதராஜ பெருமாள் கோவில் மூலஸ்தானத்தை மூடிய, மாவட்ட நிர்வாகத்தின் முடிவையும், ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரி, ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து, இதுவும், இன்று விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !