பங்குனி அமாவாசை பண்ணாரியில் கூட்டம்
சத்தியமங்கலம்: பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஏப்., 10ம் தேதி குண்டம் விழா நடக்கிறது. இதற்கான பூச்சாட்டு விழா 26ம் தேதி நடக்கிறது. பண்ணாரியில் பங்குனி மாதம் குண்டம் நடப்பதால், பங்குனி அமாவாசைக்கு பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம்.நேற்று முன்தினம் பங்குனி அமாவாசையை முன்னிட்டு, காலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. மதியம் உச்சிகால பூஜை நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலைச் சுற்றிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.தற்போது, குண்டம் விழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால், வெயில் தாக்கமின்றி பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுத்தனர். அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் பக்தர்களுக்கு தங்ககவசத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தை சுற்றிலும் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.