வனதேவதைக்கு கடா வெட்டி வழிபாடு
உடுமலை : உடுமலை அருகே தண்ணீர் இல்லாமல் வாடும் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நெல் பயிர்களை காப்பாற்ற; வனதேவதைக்கு கிடா வெட்டி மலைவாழ் மக்களுக்கு விவசாயிகள் விருந்தளித்தனர். உடுமலை அமராவதி அணை மூலம் கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டு 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி அணையின் தலைமடையாக உள்ள இப்பகுதிக்கு கூட இந்தாண்டு போதுமான தண்ணீர் இல்லாமல் அணை வறண்டுள்ளது. கல்லாபுரம், ராமகுளம் பாசனப்பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நெல் மணி பிடிக்கும் தருணத்தில் உள்ளது. மழைப்பொழிவு இல்லாத நிலையில், அமராவதி அணையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சிறிய வாய்க்கால் வெட்டி தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் முயன்றனர். இம்முயற்சியிலும், போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ள நிலையில் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். இதனையடுத்து, முதியவர்கள் ஆலோசனை அடிப்படையில் மழை வேண்டி, பாரம்பரியாக மேற்கொள்ளப்படும் சிறப்பு பூஜையை உடனடியாக நடத்த விவசாயிகள் திட்டமிட்டனர்.
நேற்று காலை அமராவதி அணையின் அருகேயுள்ள மலைப்பிடாரியம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் கிடா வெட்டினர். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்பகுதியிலுள்ள கரட்டுப்பதி மலைவாழ் மக்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விவசாயிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் கோடை காலம் துவங்கியதும் மழை வேண்டி மலைப்பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துகிறோம். இந்தாண்டு அமராவதி அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. மழையும் தாமதித்து வருவதால், மழை வேண்டி பூஜை நடத்தினோம். மலைவாழ் மக்களுக்கு திருப்தியாக விருந்து உண்ட பின்னரே மற்றவர்கள் உணவு உண்ண அனுமதியளிக்கிறோம். இயற்கையோடு இணைந்து வாழும் மலைவாழ் மக்களை திருப்திபடுத்துவதன் மூலம் மழை கிடைக்கும் என்பது இப்பகுதியின் நம்பிக்கையாகும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.