விடங்கேஸ்வரர் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு
கிள்ளை : தில்லைவிடங்கன் விடங்கேஸ்வரர் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கனில் கடந்த 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் விடங்கேஸ்வரரையும், பர்வதாம்பாளையும் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்லெண்ணையில் இரு தீபம் ஏற்றி வழி பட்டால் காது கேளாதவர்கள், வாய் பேசமுடியாதவர்கள் குணமடைவதாக ஐதீகம். இக்கோவிலில் 1887ம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அறங்காவல்குழுத் தலைவர் தியாகராஜன் பிள்ளை தலைமையில் அப்பகுதியினர் மற்றும் மாரிமுத்தாப் பிள்ளை நற்பணி மன்றம் சார்பில் புதுப்பித்து பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மண்டல அபிஷேகத்தையொட்டி தினமும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் மண்டல அபிஷேக நிறைவு விழாவில் சென்னை மகாலட்சுமி குப்புசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.