ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா
கீழக்கரை, :ராமநாதபுரம் மாவட்டம்ஏர்வாடி தர்காவில் மதநல்லிணக்க சந்தனக் கூடு விழா நடந்தது.ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவின் 845ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஜூலை 4 மாலை 6:30 மணிக்கு துவங்கியது.
ஜூலை 13ல் அடிமரம் ஊன்றப்பட்டது. ஜூலை 14 மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றமும் நடந்தது.ஜூலை 26 மாலை 6:00 மணி முதல் அதிகாலை 3:00 மணிவரை பாதுஷா நாயகத்தின் மவுலீது ஓதப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து 13 குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, ஒரு யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து சமுதாயத்தினரும் இழுத்தனர்.தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5:00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில்சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆக., 2 அன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு அன்னதானம் வழங்கப்படும்.ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார்கள், பொதுமகா சபையினர் செய்துஇருந்தனர்.