உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா கொடியேற்றம்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா கொடியேற்றம்

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், நேற்று கொடியேற்றம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று.

இங்கு ஆடிக்குண்டம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக்குண்டம் விழா கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கொடியேற்ற விழா நடந்தது. சிங்கம், சூலாயுதம் உருவம் போட்ட கொடியை, தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலில் கொடிக்கு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து கோவிலுக்கு கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து, சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். இவ்விழாவில் தேக்கம்பட்டி ஊர்பொது மக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, 5:00 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி கமிஷனர் ஹர்சினி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

நடைபாதை விரிப்பு:
தற்போது சித்திரை மாதத்தில் அடிப்பது போல், வெயில் சுட்டெரிக்கிறது. பக்தர்கள் வெறும் காலில் பவானி ஆற்றிலிருந்து, கோவிலுக்கு வருவதற்கும், கோவிலில் இருந்து பக்காசூரன் சன்னதிக்கும் செல்ல முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். உடனடியாக பக்தர் நடந்து செல்ல, நடைபாதையில் விரிப்பு விரிக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !