கொல்லங்கோட்டில் 1,550 பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை!
மார்த்தாண்டம் : கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் பங்குனி பரணி விழாவில் நேற்று வண்டியோட்டம் பக்தி பரவசத்துடன் நடந்தது. இன்று 1,550 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தென் தமிழகத்தில் உள்ள தேவி கோயில்களில் தனிச்சிறப்பு பெற்றது. இக்கோயில் குமரி மாவட்டத்தில் அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. தமிழக - கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபாட்டு முறைகள் கேரள கலாச்சாரத்தை ஒத்துள்ளது.
கோயில் சிறப்பு: கொல்லங்கோட்டில் அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒரே வழிபாட்டு முறை கொண்ட அம்மனுக்கு இங்கு மட்டுமே இரண்டு கோயில்கள் உள்ளது மற்றுமொரு சிறப்பாகும். கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டருக்கு அப்பால் வட்டவிளையில் மூலகோயிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 500 மீட்டருக்கு அப்பால் வெங்கஞ்சியில் திருவிழா கோயிலும் அமைந்துள்ளது.
திருவிழா கோயில் எழுந்தருளல்: ஒவ்வொரு வருடமும் பங்குனி பரணியை முன்னிட்டு 10 நாட்கள் நடக்கும் தூக்க திருவிழாவிற்காக அம்மன் மூலகோயிலில் இருந்து வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். இதேப்போன்று ஆண்டுதோறும் மண்டல பூஜையை முன்னிட்டு 41 நாட்கள் நடக்கும் சிறப்பு பூஜையில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். ஏனைய நாட்கள் அம்மன் மூலகோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அம்மன் சிறப்பு: கொல்லங்கோட்டில் அம்மன் ஸ்ரீபத்ரையாகவும், ஸ்ரீருத்ரையாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு அம்மனுக்கு இரண்டு விக்ரகங்களும் உள்ளன. ஸ்ரீபத்ரை சாந்த குணமும், ஸ்ரீருத்ரை கோப குணமும் கொண்டவர்கள். மூலகோயிலிலும், திருவிழா கோயிலிலும் அம்மன் வடக்கு முகமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். குழந்தைகளின் தூக்க நேர்ச்சையை பார்வையிட மட்டும் அம்மன் பச்சைபந்தலில் கிழக்கு முகமாக எழுந்தருளுவார். தமிழகத்தில் கொல்லங்கோடு, மூவோட்டுகோணம், இட்டகவேலி உள்ளிட்ட ஒருசில கோயில்களில் மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இதில் கொல்லங்கோட்டில் மட்டுமே ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
நேர்ச்சை சிறப்பு: சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்கள் கையில் ஒவ்வொரு குழந்தைகள் என ஒரே நேரத்தில் எட்டு பேர் ரதத்தில் கோயிலை ஒருமுறை சுற்றிவரும் போது தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டதாக கருதப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டியும், பெற்ற குழந்தைகள் நோய் நொடியின்றி நல்லறிவு பெற்று நீண்டகாலம் வாழவும் அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
நேர்ச்சை பெயர் பதிவு: இந்த ஆண்டைய திருவிழா கடந்த 17ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த ஆண்டு தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கோவை, சென்னை மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், திருசூர், எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 6 மாதத்தில் இருந்து ஒரு வயதிற்கு உட்பட்ட 1,550 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வண்டியோட்டம்: ஒன்பதாம் நாளான நேற்று மாலை தூக்க ரதத்தின் சோதனை ஓட்டம் எனும் வண்டியோட்டம் நடந்தது. இச்சோதனை ஓட்டத்தின் போது பரம்பரை பரம்பரையாக தூக்க ரதத்தின் தச்சுப்பணி செய்பவர்கள் ரதத்தில் கோயிலை மூன்று முறை சுற்றி வந்தனர். தூக்கம் எழுதி நிறுத்தியதில் இருந்து கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருந்த பக்தர்கள் தூக்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். பெண்கள் குரவை ஒலி எழுப்பினர். "அம்மே சரணம் தேவி சரணம் "ஓம் ஓம் காளி ஜெய் ஜெய் காளி " அம்மே நாராயணா தேவி நாராயணா லெஷ்மி நாராயணா பத்ரே நாராயணா போன்ற பக்தி கோஷங்களுடன் வண்டியோட்டம் நடந்தது.
தூக்க நேர்ச்சை: விழா நிறைவு நாளான இன்று(26ம் தேதி) அதிகாலை தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், அம்மன் தூக்க நேர்ச்சையை பார்வையிட பச்சைபந்தல் எழுந்தருளல், காலை 6 மணிக்கு வரலாற்று சிறப்பு நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை துவக்க நிகழ்ச்சி, கீழ்விளாகம் தறவாட்டில் இருந்து யானை, அகம்படி அணிவகுப்புடன் கச்சேரிநடை, கண்ணனாகம் வழியாக தூக்கக்காரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. தூக்க நேர்ச்சையின் போது தூக்க ரதத்தை விரதமிருக்கும் பக்தர்கள் வடிம் பிடித்து இழுப்பர். கடந்த ஆண்டு 1511 தூக்கம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு இதைவிட கூடுதல் தூக்கம் நிறைவேற்றப்பட உள்ளதால் கடந்த ஆண்டை போன்று மறுநாள் காலை, அதாவது நாளை காலை வரை தூக்க நேர்ச்சை தொடர்ந்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 395 முறை ரதம் கோயிலை சுற்றி வலம் வர உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி தேவஸம் செயலாளர் சதாசிவன்நாயர் தலைமையில் தலைவர் பங்கஜாக்ஷன்தம்பி, துணைத்தலைவர் வக்கீல் சுகுமாரன்நாயர், பொருளாளர் சனல்குமாரன்தம்பி, இணைச்செயலாளர் சுகுமாரன்நாயர், பிரதிநிதி சபை சேர்மன் பரமசிவன்நாயர், துணைசேர்மன் குட்டன்பிள்ளை, எஜூகேஷனல் சொசைட்டி தலைவர் வக்கீல் ராமச்சந்திரன் நாயர், துணைத்தலைவர் அப்புக்குட்டன்நாயர், செயலாளர் மோகன்குமார் மற்றும் செயற்குழு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.