சென்னை குறுங்காலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
கோயம்பேடு : புதிதாகக் கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 108 சிவாச்சாரியார்களின் முன்னிலையில் நடைபெற்றது. சென்னை கோயம்பேடு, தர்மசம்வர்த்தினி உடனுறை குறுங்காலீஸ்வரர் கோவிலில் 80 லட்சம் ரூபாய் செலவில் 58 அடி உயர ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்றது. திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானமும் முடிந்த நிலையில் 8.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 9.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் மற்ற விமானங்களுக்கு 108 சிவாச்சாரியர்களின் மந்திரங்களுக்கு இடையே கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, கோவிலினுள் வீற்றிருக்கும் குறுங்காலீஸ்வரர், அம்மன், விநாயகர், முருகன் விக்ரகங்களுக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.