அத்தி வரதர் உருவத்துடன் மூலிகை சேலை
அனகாபுத்துார், இயற்கை நார் நெசவு குழுமத்தினர், அத்தி வரதர் திருவுருவம் வரையப்பட்ட, மூலிகை சேலையை தயாரித்து, காஞ்சி அத்தி வரதருக்கு சாற்றுவதற்காக காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், தற்போது நடந்து வருகிறது. இதுவரை, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், அத்தி வரதரை தரிசித்துள்ளனர். இந்நிலையில், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமத்தினர், அத்தி வரதரின் திருவுருவம் வரையப்பட்ட, மூலிகை சேலையை தயாரித்துள்ளனர். இது குறித்து, அக்குழுமத்தின் தலைவர், சி.சேகர், 55, கூறியதாவது:குழுமம் சார்பில், மூங்கில், வாழை, கற்றாழை, அண்ணாச்சி போன்ற இயற்கை நார்களில் இருந்து, சேலை, பை ஆகியவற்றை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம். வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கிறோம். இந்நிலையில், காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும், அத்தி வரதருக்கு, சேலை சாற்றுவதற்கு திட்டமிட்டோம். இதற்காக வேப்பிலை, மஞ்சள், துளசி கலந்த இயற்கை நாரில், சேலை தயாரித்து, அதில், அத்தி வரதரின் திருவுருவத்தை வரைந்துள்ளோம். இந்த சேலையை, அத்தி வரதருக்கு சாற்றுவதற்காக காத்திருக்கிறோம். ஹிந்து அறநிலையத் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம், அனுமதி கோரியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.