உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்துார் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா கோலாகலமாக நடந்தது. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இவ்விழாவிற்காக ஜூலை 27 முதல் சதுரகிரிக்கு பக்தர்கள் அனுமதிக்கபட்ட நிலையில் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசையான நேற்று அதிகாலை 4:00 மணி முதல் வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர்.

கரடுமுரடான பாதை, வழுக்குபாறைகளின் வழியாகவும் சென்ற பக்தர்கள் வனதுர்க்கை, இரட்டை லிங்கம், பிலாவடி கருப்பசாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தர மூர்த்தி சன்னிதிகளில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாகாபரணம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இதன் பின் மாலையில் துவங்கிய அமாவாசை சிறப்பு வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பக்தர்கள் நேர்த்தி கடனாக முடி காணிக்கை செலுத்தினர். பெரும்பான்மையான பக்தர்கள் தண்ணீர் பாட்டில்களோ சென்றனர். அடிவாரத்தில் உள்ள தனியார் அன்னதானமடங்களில் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டது.

மலையில் வைத்து சாப்பிடவும் பார்சல் உணவுகள் வழங்கபட்டது.கோயிலிலும் அறநிலையத்துறை மூலம் அன்னதானம் மற் றும் கஞ்சி வழங்கபட்டது. தாணிப்பாறை விலக்கிலிருந்து தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வரை கட்டணமில்லா அரசு பஸ்கள் இயக்கபட்டது. மதுரை, தேனி உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது. வத்திராயிருப்பிலிருந்து கோயில் வரை பல இடங்களில் போலீசார் நிறுத்தபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர். இருவர் பலிமதுரை மாவட்டம் திருமங்கலம் சித்துாரை சேர்ந்தவர் முருகன் 47. இவர் நேற்று முன்தினம் இரவு தாணிப்பாறை மலையடிவாரம் தோப்பில் தங்கியிருந்தபோது, ஏற்பட்ட மாரடைப்பில் இறந்தார். மதுரை கற்பகம் நகரை சேர்ந்த முருகேசன் 60, சதுரகிரி கோயிலுக்கு மலையேறும்போது கோணத்தலைவாசல் பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

தண்ணீரின்றி தவிப்பு: தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எராளமான பக்தர்கள், தேனிமாவட்டம் உப்புத்துறை வழியாக 20 கி.மீ., துாரம் கரடு முரடான பாதையில் நடந்து சென்றனர். குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர்.வருஷநாடு, கண்டமனுார் வனத்துறையினர் யானை கஜம் மலைப் பகுதியில் முகாமிட்டு கோயிலுக்கு சென்ற பக்தர்களிடம் பிளாஸ்டிக் மற்றும் தீப்பற்றக் கூடிய பொருட்களை பறிமுதல் செய்தனர். மாலை 6:00 மணிக்கு மேல் இந்த வழியாக கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். மாளிகைப்பாறை கருப்பசாமிக்கு கோயிலில் பக்தர்கள் மதுபாட்டில் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !