உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசை
 உடுமலை:ஆடி அமாவாசையை முன்னிட்டு, உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ் வரர் கோவிலில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்தும் வழிபட்டனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.ஆடி மாதம் துவக்கம் முதல், சூரியன் தெற்கு நோக்கி செல்லும், தட்சிணா யன காலத்தில், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சி படிப்படியாக அதிகரிக்கும்.
பருவ மழைகள் பெய்து, நீர் நிலைகளில் நீர் வளம் பெருகும் காலத்தில், ஆடிப்பட்டம் சாகு படியை துவக்கும் விவசாயிகள், ஆடி அமாவாசை அன்று, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர்.பயிர் செழிக்கவும்,கால்நடைச் செல்வங்கள் பெருகவும், ஆடிப்பட்ட சாகுபடிக் கான விதைகளை கொண்டு வந்து, வழிபட்டு செல்வதை பாரம்பரியமாக கடை பிடித்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையான நேற்று (ஜூலை., 31ல்), உடுமலை, பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதுார், ஆனைமலை, குடிமங்கலம், பெதப்பம்பட்டி, மடத்துக்குளம் என சுற்று வட்டார பகுதி யிலிருந்து, நுாற்றுக்கணக்கான ரேக்ளா வண்டிகளில், திருமூர்த்திமலைக்கு நேற்று முன் தினம் (ஜூலை., 30ல்), முதலே, விவசாயிகள் வந்தனர். இதனால், திருமூர்த்திமலைக்கு வரும் ரோடுகளில், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அணி வகுத்தன.முன்னோர்களுக்கு ’திதி’ கொடுத்து வழிபாடுஆடி, தை அமாவாசைகளில், முன்னோர்கள் நினைவு கூரும் வகையில், ஆத்மா சாந்தியுடன், ஆசி கிடைக்கும் வகையில், திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர். 
ஆடி அமாவாசை தினமான நேற்று (ஜூலை., 31ல்), மும்மூர்த்திகள் எழுந்தருளி வரும் திரு மூர்த்திமலை, பாலாற்றின் கரையில், பல ஆயிரக்கணக்கானவர்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.மலையில் திரண்ட பக்தர்கள் ஆடி அமாவாசை தினமான நேற்று (ஜூலை., 31ல்), பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா மாநிலத்திலிருந்தும், பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலு க்கு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டுச்சென்றனர். மூலவர் பாறை மீது, உப்பு, மிளகு, சந்தனம் ஆகியவற்றை வீசி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அறநிலையத்துறை சார்பில், கோவில் வளாகத்தில், நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் வரிசை தடுப்புகள், தனி யார் அன்னதானம் வழங்க, தடுப்புகள் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கோவில் வளாகம் மற்றும் திருமூர்த்தி அணை வரை, ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுகாதார துறை சார்பில், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.தண்ணீரின்றி வறண்ட ஆறுவழக்கமாக ஆடி அமாவாசைக்கு பஞ்ச லிங்கம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும் பாலாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். 
தற்போது, பருவமழைகள் ஏமாற்றியதால் வறண்டு காணப்பட்டது. பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் தண்ணீர் இல்லாததால், லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, குளிக்க, குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. பாலாறு வறண்ட நிலையில், மணல் மூட்டைகள் அடுக்கி, அதில் லாரி தண்ணீர் விட்டு, பக்தர்கள் திதி கொடுக்க வசதி செய்யப்பட்டிருந்தது.