வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா: அலகு குத்தி பரவசம்
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடிக்குண்டம் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் அம்மனை வழிபாடு செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாவது நாளான நேற்று கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள், அக்னி சட்டியை கைகளில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்பு கோவிலின் உள்ளே வலம் வந்து அம்மனை மனமுருக வேண்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.அதே போன்று பக்தர்கள் தங்களது உடலின் பல பகுதிகளில், அலகு குத்தி வந்து அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த இரு வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.விழாவின் நிறைவில் அம்மன் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார். இன்று காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும், 9:00 மணிக்கு ஹரிஹரசுதன் பஜனைக்குழுவினரின் பஜனையும் நடைபெறுகிறது. மதியம், 2:00 மணிக்கு கொடியிறக்கமும், அதைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது.