நரசிம்ம ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா : மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!
நாமக்கல்: நாமக்கல் நரசிம்ம ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.புராண வரலாற்றுப்படி, அனுமனால் கொண்டுவரப்பட்ட சாளக்கிராமம், மலை வடிவில், நாமக்கல் நகரின் நடுவே அமைந்துள்ளது. மலையின் இருபுறமும் பாறையில் குடையப்பெற்ற இருகுகைக் கோவில்கள் நாமகிரித்தாயாரோடு கூடிய நரசிம்மரும், அரங்கநாயகித் தாயாரோடு அரங்கநாதரும் கலை எழில் மிக்க உருவச்சிற்பங்கள் பலவற்றுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்குகைக்கோவில்கள், 8ம் நூற்றாண்டில் குடையப்பட்டது. ஸ்வாமி நரசிம்மர் கோவிலின் முன்புறம், 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் ஸ்வாமி கம்பீரமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவில்களுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமியை வழிபாடு செய்கின்றனர். மேலும், வெளிநாட்டினரும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். 40 ஆண்டுகளாக வழிபாடு இல்லாமல் இருந்த மலைவரதராசர் சன்னதியில், புதிதாக மூலவர் சிலை நிறுவப்பட்டு, 1995ம் ஆண்டு முதல் தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோவில்களில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விழா, மார்ச் 28ம் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அங்குரார்பணம் நடக்கிறது. 29ம் தேதி காலை 10.45 மணிக்கு திருக்கொடியேற்றப்படுகிறது. அன்று முதல் ஏப்ரல் 3ம் தேதி தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, பகல் 1 மணிக்கு ஸ்நபன திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு அன்னம், சிம்மம், அனுமந்தம், கருடன், சேஷ, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏப்ரல் 4ம் தேதி காலை பல்லக்கு, இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.தொடர்ந்து மொய் சமர்ப்பிக்கப்படுகிறது. ஏப்ரல் 6ம் தேதி காலை 8.45 மணிக்கு கோட்டை நரசிம்மர் திருத்தேர் வடம்பிடித்தல், மாலை 4.45 மணிக்கு பேட்டை அரங்கநாதர் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி, பல்லக்கு புறப்பாடும், இரவு 7 மணிக்கு சத்தாவரணம், கஜலட்சுமி வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா, வாண வேடிக்கையும் நடக்கிறது. தொடர்ந்து, ஏப்ரல் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை, மாலை திருமஞ்சனம், புஷ்பயாகம், வசந்த உற்சவம், விடையாற்றி உற்சவம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.