பட்ஜெட்: 1006 கோவில்களுக்கு குடமுழுக்கு, நாள் முழுவதும் அன்னதானம்!
பழநி மற்றும் ஸ்ரீரங்கத்தில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் 1,006 கோவில்களுக்கு, குடமுழுக்கு நடத்தப்படுகிறது.
நிதி ஒரு விஷயமா? இதற்கான நிதி குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: உபயதாரர்கள், கடந்த முறை குடமுழுக்குக்கு நிதி அளித்தவர்கள், ஊரில் உள்ள வி.ஐ.பி.,க்கள் ஆகியோரை அணுகினாலேயே, நிதி கிடைத்துவிடும். அப்படியும் கிடைக்காதவற்றுக்கு, அறநிலையத் துறையில், பொது நிதி உள்ளது. புராதன கோவில்களாக இருந்தால், சுற்றுலா துறை நிதியைப் பயன்படுத்துவோம். இவ்வாறு, மொத்தம் 13 வகையான நிதியமைப்புகள், கோவில்களுக்கு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். தவறாக வகை மாற்றம் செய்யப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்பதற்கு, முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன என, பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது; எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது; அதற்கு என்ன முயற்சி எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இல்லை.
கூடுதலாக 50 கோவில்கள்: ஏற்கனவே, 468 கோவில்களில் செயல்பட்டு வரும் அன்னதானத் திட்டம், மேலும் 50 கோவில்களுக்கு, இந்த ஆண்டு முதல் விரிவுபடுத்தப் படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள கோவில் சமையல் கூடங்களும், நவீனப்படுத்தப்பட உள்ளன. ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில், பழநி தண்டாயுதபாணி கோவிலில், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, நாள் முழுவதும் அன்னதானம் அளிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தக் கோவில்களில் ஏற்கனவே, பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளன. திட்டம் துவக்கப்படும்போது, இரு கோவில்களிலும் சேர்த்து, நாள் முழுவதும், 6,000 பேர் உணவருந்துவர் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான சமையலர்கள், உதவியாளர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டி இருக்கும். வழக்கமான அன்னதானத் திட்டத்துக்கு, தினக்கூலி அடிப்படையில் ஊழியர்கள் உள்ளனர்.
என்று துவக்கம்? இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, நீதிநெறி கருத்துகளை, கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனதில் ஆழப்படுத்த, சனிக்கிழமை தோறும் முக்கிய கோவில்களில், வகுப்புகள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வகுப்புகளின்போது சிற்றுண்டியும், சிறந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் அளிக்கப்படும். மேற்கண்ட இரு திட்டங்களும், முதல்வர் ஜெயலலிதாவிடம் தேதி பெற்றுத் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* பழநியில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, கம்பிவட சீருந்து (வின்ச்) வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
* அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 560 மடிக் கணினிகளை, "வீடியோ கான்பரன்சிங் மூலம், முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார்.
- ஆர். ரங்கராஜ் பாண்டே -