உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை திருவிழா!

கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை திருவிழா!

நாகர்கோவில்: குழந்தைகளின் நலனுக்காக நடத்தப்படும் கொல்லங்கோடு மீனபரணி தூக்க நேர்ச்சை திருவிழாவில் 1550 குழந்தைகள் தூக்க மரத்தில் ஏற்றப்பட்டு கோயிலை வலம் வந்தனர். கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டுபவர்களும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாகவும் வாழவும் வேண்டி பெற்றோர் இந்த வழிபாட்டை நடத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி குழந்தைகளை தூக்கமரத்தில் தூக்கி தொங்கும் தூக்கக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கோயிலில் விரதம் இருதனர். பத்தாம் நாள் விழாவான நேற்று தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெற்றது, 41 அடி உயரமுள்ள தூக்கமரத்தில் நான்கு தூக்க வில்கள் கட்டப்பட்டு அதில் நான்கு தூக்ககாரர்கள் துணியால் இடுப்பில் கட்டப்பட்டனர். பின்னர் அவர்கள் கைகளில் தலா ஒரு குழந்தை கொடுக்கப்பட்டதும் தூக்கமரம் ஆகாயத்தில் மேல் நோக்கி எழும்பியது. தொடர்ந்து தேர் போன்ற தூக்க வண்டியை பக்தர்கள் இழுந்து கோயிலை ஒரு முறை வலம் வந்ததும் இந்த குழந்தைகளுக்கான நேர்ச்சை நிறைவு பெறும். இப்படி 1550 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது. விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !