மகாலிங்க சுவாமி கோவிலில் பூ குண்டம் திருவிழா கோலாகலம்!
மஞ்சூர் : மஞ்சூர் அருகே மேலூர் மகாலிங்க சுவாமி கோவிலில் பூ குண்டம் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மேற்குநாடு சீமை 33 கிராம மக்கள் இணைந்து கொண்டாடும் பூ குண்டம் திருவிழா மேலூர் கிராமத்தில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை மேற்குநாடு சீமை பார்பத்தி கிருஷ்ணாகவுடர் தலைமையிலும், மேற்குநாடு சீமை சின்ன கணிகெ போஜாகவுடர் முன்னிலையில் 33 ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்றிரவு 10 மணிக்கு படுகர் சமுதாய நாடகமான "கொட்டமனெ கெட்டரவா என்னும் நாடகம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு மகாலிங்கசுவாமி கோவிலில் கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து படுகரின மக்கள் பாரம்பரிய உடையணிந்து ஆடல், பாடல் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று ஆடி மகிழ்ந்தனர். காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 2.30 மணிக்கு நடந்த பூ குண்டம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பூ குண்டம் இறங்கினர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் கிருஷ்ணாகவுடர், கோவில் தலைவர் சுந்தரம் கவுடர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.