உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை : நாளை 23ம் நாள்!

சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை : நாளை 23ம் நாள்!

சிருங்கேரி சாரதா பீடத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தினமும் வேதநெறிமுறைப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் விரும்பிய சேவையை ஏற்று நடத்துவதற்கான விபரம் அனைத்தும் மடத்தின் பேஷ்கார் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தை முதல்நாள் மகரசங்கராந்தி பூஜை நடக்கும். அதே மாதத்தில் லலிதாபஞ்சமி பூஜையும், ரதசப்தமியும் நடக்கின்றன. மகாசிவராத்திரி நாளில் சிருங்கேரி சுவாமி இரவு முழுவதும் கண்விழித்து சந்திர மவுலீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை நடத்துவார். குருநிவாஸ் பூஜா வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடக்கும். யுகாதி, ராமநவமி பண்டிகைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஏப்ரல் அல்லது மே மாதம் வரும் சங்கர ஜெயந்தி, ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது. "வித்வத் சதஸ் என்னும் வேதபண்டிதர்களின் சபைக்கூட்டம் விமரிசையாக நடத்தப்பட்டு, மடத்தின் சார்பாக கவுரவிக்கப்படுகின்றனர். கிரிஜா கல்யாணம், நரசிம்மஜெயந்தி இம்மாதத்தின் மற்ற விழாக்கள். ஜூலை முதல் செப்டம்பர் வரை சாதுர்மாஸ்ய விரதத்தை சிருங்கேரி சுவாமி மேற்கொள்வார். அப்போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் ஆசி பெற்றுச் செல்வர். வியாச பூஜையுடன் தொடங்கும் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் சிராவண சோமவாரம், வரமகாலட்சுமி பூஜை, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஸ்வர்ண கவுரி விரதம், வரசித்தி விநாயக பூஜை, கேதாரீஸ்வர விரதம், வாமன ஜெயந்தி, அனந்த பத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம் ஆகிய வழிபாடுகளை சுவாமி தலைமையேற்று நடத்துகிறார். சாரதாபீடத்தின் பிரதான திருவிழாவான நவராத்திரி செப்டம்பர் அல்லது அக்டோபரில் பத்துநாட்கள் நடத்தப்படும். நவம்பர் அல்லது டிசம்பரில் கார்த்திகை சோமவாரம், வித்யாசங்கர ஆராதனை, க்ஷிராப்தி துவாதசி, லட்ச தீபோத்ஸவம், மகாபிரதோஷம், சுப்ரமண்ய சஷ்டி, அந்தகாசுர வதம், ஆர்த்ரோத்ஸவம், காலபைரவ அஷ்டமி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. நாளை(மார்ச்28) சிருங்கேரி சுவாமியின் பிறந்தநாள் விழாவான வர்தந்தி நடக்கிறது.கோவை ரேஸ்கோர்ஸ் ரோடு, சிருங்கேரி சங்கர மடத்தில் சுவாமிகள் பக்தர்களுக்குத் தரிசனம் அளிக்கிறார். போன்: 0422 222 0760.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !