மாரியம்மன் கோவில் தீ மிதித்திருவிழா!
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள பெரியசிங்களாந்தி மணிகண்டேஸ்வரர் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் 24ம் ஆண்டு தீ மிதித்திருவிழா நேற்று நடந்தது. பெரிய சிங்களாந்தி முத்து மாரியம்மன் கோவில் 24ம் ஆண்டு திருவிழாவையொட்டி முன்னதாக, திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் ரோட்டில் உள்ள சங்கிலிவீரன் கோவிலில் இருந்து பால்காவடி மற்றும் ரத காவடிகள் ஊர்வலமாக எடுத்து வந்தும், பால்குடம் எடுத்தும், தீமிதித்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. பின்னர், இரவில் முத்துமாரியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாட்டை செயல் அலுவலர் நீதிமணி மற்றும் பெரியசிங்களாந்தி பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
* திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தகரவெளி குத்தடி மாரியம்மன் கோவில் தீ மிதி பெருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீ மிதித்தும் அம்மனை வழிபட்டனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி பொன்னிறை தகரவெளி குத்தடி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த ஒருவாரமாக தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு அம்மன் வீதியுலா புறப்பாடும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான தீ மிதித்திருவிழாவையொட்டி நேற்று காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாவிளக்கு போடுதல் நடந்தது. பின்னர், மாலையில் பால்காவடி, அலகுகாவடி, ரதக்காவடிகளில் பக்தர்கள் தீமிதித்து அம்மனை பக்திப்பெருக்குடன் வழிப்பட்டனர். தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் ஆடுகள், கோழிகள், நெல்மூட்டைகளை கோவிலுக்கு தானமாக பக்தர்கள் வழங்கினர். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை செயல்அலுவலர் சேகர் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.