கண்ணமங்கலம் ஆடிப்பூர விழாவில் ஏழு வடை ரூ.19,350க்கு ஏலம்
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில், ஏழு வடை, 19 ஆயிரத்து, 350 ரூபாய்க்கு ஏலம் போனது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் ஆண்டு தோறும், ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக ஆடிப்பூர விழா நடந்து வந்தது. இதில், முக்கிய நிகழ்வாக கொதிக்கும் எண்ணெயில் பக்தரால் வெறும் கையால் சுடப்படும் வடை, ஏலம் விடப்படும். இதை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் விடுவர். அதன்படி, ஆடிப்பூர விழாவில், ஏழு வடை கள் சுடப்பட்டன. இதில், முதல் வடை, 9,500 ரூபாய், இரண்டாவது வடை, 3,700 ரூபாய், மூன்றா வது வடை, 3,000 ரூபாய் உள்பட ஏழு வடைகள், 19 ஆயிரத்து, 350க்கு ஏலம் விடப்பட்டன. மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து வந்து, அம்மனுக்கு மாலை அணிவித்தனர். மேலும், மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.