சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு கொடியேற்றத்தடன் தொடக்கம்!
சபரிமலை : சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., 5ல், பம்பையில் ஆராட்டு நடைபெறுகிறது. சபரிமலையில் ஆண்டுதோறும், பத்து நாள் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேறி, உத்தரம் நாளில் ஆராட்டு நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழா, நேற்று காலை தொடங்கியது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில், ஸ்ரீகோயில் முன் உள்ள மண்டபத்தில், கொடிபூஜை நடைபெற்றது. மேளதாளம் முழங்க, கொடிப்பட்டம், பவனியாக எடுத்து வரப்பட்டது. முத்துக்குடை ஏந்திய யானை, வடக்கு வாசல் வழியாக கொடிமரம் வந்து சேர்ந்தது. பின்னர் தந்திரி தங்க கொடிமரத்தில், சரண கோஷம் முழங்க, கொடியேற்றினார். இன்று முதல் ஒன்பதாம் நாள் விழா வரை, தினமும் உச்சபூஜைக்கு முன்னோடியாக, உற்சவபலியும், இரவில் அத்தாழ பூஜைக்கு பின், ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. ஏப்.,4, ஒன்பதாம் நாள் விழாவில், இரவு அத்தாழபூஜைக்கு பின், சுவாமி சரங்குத்திக்கு எழுந்தருளுவார். 5ம் தேதி காலை, 8 மணிக்கு சுவாமி, ஆராட்டுக்காக, யானை மீது, பம்பைக்கு எழுந்தருளுவார். பகல், 12.30 மணிக்கு, பம்பையில் ஆராட்டு நடைபெறும். மாலை, 4 மணிக்கு, ஆராட்டு பவனி, சன்னிதானத்துக்கு புறப்படும். இரவில் கோயில் வந்ததும், கொடி இறக்கப்பட்டு, திருவிழா நிறைவு பெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.அதன் பின், சித்திரை மாத பூஜை மற்றும் விஷு திருவிழாவுக்காக, சபரிமலை நடை, ஏப்.,10 மாலை, 5.30 மணிக்கு திறக்கும். 18ம் தேதி இரவு, 10 மணி வரை நடை திறந்திருக்கும். 14ம் தேதி விஷு கனி தரிசனம் நடைபெறுகிறது.