கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளியில் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மாரியம்மன் கோவிலில், கூழ் ஊற்றும் திருவிழா நேற்று நடந்தது. கடவரப்பள்ளி கிராம மக்கள் மஞ்சள் குடம் மற்றும் பால் குடங்களை சுமந்தபடி, கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பின்னர், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.
அம்மனுக்கு கூழ் படைத்த பெண்கள், பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கோட்டை அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத் விழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* தர்மபுரி, கடைவீதி முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, திரளான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். கடந்த ஜூலை, 28ல், கொடியேற்றம் மற்றும் கங் கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 4ல், காலை, 11:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் (ஆக., 5ல்) இரவு, 9:00 மணிக்கு திரளான பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது. இன்று (ஆக., 7 ல்) மாலை, 4:00 மணிக்கு பூங்கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை (ஆக., 8 ல்) காலை, 10:00 மணிக்கு கும்பபூஜை, இரவு, 7:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (ஆக., 9 ல்) காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், மாலை, 5:00 மணிக்கு சுவாமி விடையாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது.