ராஜகோபால ஸ்வாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம்
மன்னார்குடி: மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பிரம்ம உற்சவத்தின் 16ம் நாள் நிகழ்ச்சியாக வெண்ணெய் தாழி உற்சவம் நேற்று காலை ஏழு மணியளவில் துவங்கியது. முன்னதாக, கோவிலில் ஸ்ரீ வித்ய ராஜகோபாலனுக்கு வெண்ணெய் திருடிய கிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 7.30 மணியளவில் வித்யராஜகோபாலன், கிருஷ்ணர் கோலத்தில் திருவீதியுலா நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபாலன் மீது வெண்ணெயை வீசி, இருகரம் கூப்பி வழிபட்டனர். இதையடுத்து மாலை மூன்று மணியளவில் வெண்ணெய் தாழி மண்டபத்தில் வைத்து ஸ்ரீ வித்ய ராஜகோபாலனுக்கு செட்டி அலங்காரம் செய்து, வழிபாடு நடந்தது. பின்னர் இரவு ஏழு மணியளவில் ஸ்ரீ வித்யராஜகோபாலன் தங்க வெட்டும் குதிரையில் ராஜ அலங்காரத்தில் தோன்ற, அனைத்து வீதிகளிலும் ஸ்வாமி புறப்பாடு நடந்தது. இரவு ஒன்பது மணிக்கு பந்தலடியில் இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை நடத்தப்பட்டது. மன்னார்குடியில் நேற்று நடந்த வெண்ணெய் தாழி உற்சவ ஏற்பாட்டை மன்னார்குடி யாதவ சமூகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இதேபோல, வெட்டும் குதிரை நிகழ்ச்சி ஏற்பாட்டை சசிகலாவின் தம்பி திவாகரனின் குடும்பத்தினர் செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது.