மாரியம்மன் தெப்பம், சரவணப்பொய்கையை மீட்க சிறப்பு திட்டம்
மதுரை: மதுரை வைகை ஆறு, மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையை மீட்க 9.4 கோடி ரூபாயில் சிறப்பு திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வற்றாத ஜீவநதியாக விளங்கிய வைகை, இன்று நகரின் பிரதான கழிவுநீர் கால்வாயாக திகழ்கிறது. நகரின் வடக்கு பகுதியிலிருந்து அதிக கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. பந்தல்குடி, விளாங்குடி, வண்டியூர் கால்வாய்களில் இருந்து நேரடியாக கழிவுநீர் விடப்படுகிறது. குழாய்கள் மூலமும் கழிவு நீர் கலக்கிறது. இருபது ஆண்டுகளாக இந்நிலை நிலவுகிறது.தற்போது கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி கமிஷனர் விசாகன் நடவடிக்கை எடுத்துள்ளார். வண்டியூர், விளாங்குடி கால்வாய் கழிவுநீரை சுத்திகரிக்க 7.8 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கால்வாய்கள் ஆற்றில் சந்திக்கும் இரு இடங்களிலும் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. இவற்றின் மூலம் தலா 2 எம்.எல்.டி., நீரை சுத்திகரிக்கலாம். சுத்திகரிக்கப்பட்ட நீரை சாலையோர பூங்காக்களுக்கு பயன்படுத்தலாம். மீட்கப்படும் மாரியம்மன் தெப்பம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை மீட்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பனையூர் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் வைகையிலிருந்து தண்ணீர் வருவதில்லை. இதனால் வறண்டுள்ளது. தெப்பத்திருவிழாவுக்காக மட்டும் தண்ணீர் நிரப்பப்படும். துார்வாரி வரத்துக்கால்வாயை மீட்க ஒரு கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின் ஆண்டு முழுவதும் தெப்பக்குளத்தில் தண்ணீர் இருக்கும். சலவை, குளியல் மையம் துவைப்பது, குளிப்பதால் மாசுபாட்டில் சிக்கிய திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையை மீட்க அருகே சலவை மையம், குளியல் மையமும் அமைக்கப்படவுள்ளது. குப்பை, பிளாஸ்டிக், கழிவுகள் சேராதவாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான திட்டத்திற்கு 60 லட்சம் ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ.9.4 கோடி தேவை: இம்மூன்று திட்டங்களுக்கும் 9.4 கோடி ரூபாய் தேவை. இதற்கான நிதியை மும்பை தனியார் நிறுவனம் சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து தரவுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை அந்நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் துவங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.