தாயமங்கலம் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நேற்று முன்தினம் ( மார்ச் 28 ) இரவு 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 10 மணிக்கு சிம்மம் , காமதேனு , அன்னம், பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். முக்கிய திருவிழாவான பொங்கல் விழா ஏப்., 4 காலை 6 மணிக்கும் , ஏப்., 5 மாலை 6.55 மணிக்கு தேரோட்டம், ஏப்., 6 காலை 7.35 மணிக்கு பால்குடம் , மாலை 6.05 மணிக்கு ஊஞ்சல், இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறும். ஏப்., 7 இரவு 8 மணிக்கு தேவஸ்தான தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவில் பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் உட்பட பலர் பங்கேற்றனர். கோழி, ஆடு விலை உயர்வு: தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடக்கும். பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வரும் 4ந் தேதி நடைபெற உ ள்ளது. அன்று ஏராளமான பக்தர்கள் கோவிலில் கோழி, ஆடு பலியிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். மானாமதுரை சுற்று வட்டார பகுதியில் உள்ளவர்களும் தாயமங்கலம் கோவில் இருக்கும் திசையைப் பார்த்து பொங்கல் வைத்து கோழி, ஆடு பலியிடுவர். மானாமதுரையில் நடந்த சந்தையில் நேற்று ஆடு, நாட்டுக்கோழி விலை பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது. சாதாரண நாட்களில் ரூ.300க்கு விற்ற நாட்டுக்கோழி நேற்று ரூ.500வரை விற்கப்பட்டது. ரூ.3,500க்கு விற்ற ஆடு 4,500 வரை விற்கப்பட்டது.