எல்லைப்பிடாரி கோயிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
சேலம்: சேலம், எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழாவில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம், காந்திரோடு எல்லைப் பிடாரியம்மன் கோவில் விழா, கடந்த 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 27ம் தேதி மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பு நடந்தது. 28ம் தேதி காலை அலகு குத்தும் நிகழ்ச்சியும், பொங்கல் விழாவும் நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு அம்மன் பக்தர்களுடன் சின்ன திருப்பதி சென்று மஞ்சள் நீராடி, மஞ்சள் ஆடை அணிந்தார். பின்னர், திருவீதி உலா வந்து குண்டம் இறங்கும் இடத்துக்கு அம்மன் அழைத்து வரப்பட்டார். நேற்று மதியம் முதலே குண்டம் இறங்குவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று மாலை 6.30 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இரவு 11.30 மணி வரை நீடித்தது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சியையொட்டி, போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.