பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உழவார பணி
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பரமக்குடி சிவனடியார்கள் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர். பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் எதிரில் 5 ஏக்கர் பரப்பளவில் திருவாடுதுறை ஆதினத்திற்கு செந்தமான திலகவதியார் நந்தவனம் உள்ளது. நந்தவனத்தில் இருந்து தினமும் கோவிலுக்கு பூக்கள் அனுப்பப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன. இந்த நந்தவனம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர்கள் மண்டி கிடந்தது.
நந்தவனத்தை சீரமைத்து சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சிவனடியார் பரமேஸ்வரன் தலைமையில் தமிழகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக கோவில் அருகில் தங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட அவர்கள், நந்தவனத்தில் இருந்த முட்புதர்களை அகற்றி புதியதாக பூச் செடிகளை நட்டனர். தொடர்ந்து ஆலயத்திற்குள் உழவார பணி மேற்கொண்டனர்.