உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகள் கரைக்க கடும் கட்டுப்பாடு!

விநாயகர் சிலைகள் கரைக்க கடும் கட்டுப்பாடு!

கடலுார் : ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர் நிலைகளில் கரைக்க மாசு கட்டுப் பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை யொட்டி, பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கடைகளில் வாங்கிசென்று, வீட்டில் வைத்து பூஜை செய்து, 3வது நாள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.தற்போது அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் ’மெகா சைஸ்’ விநாயகர் சிலைகளை, பொது இடங்களில் வைத்து பூஜித்து கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் தயார் செய்யப்படுவதால், நீர்நிலைகள் மாசு அடைவது கண்டறியப்பட்டுள்ளது.

அதையொட்டி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநில மாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு, குளம்) நமக்கு அடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால், குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றது மான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மை யுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலை களை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலை களில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுரைபடி இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உப்பனாறு, தேவனாம்பட்டிணம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும் படி, பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு கலெக்டர், எஸ்.பி., சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !