25 ஆண்டுகளுக்கு பின் குதிரை எடுப்பு விழா
திருப்புவனம் : பூவந்தியில் 25 ஆண்டுகளுக்கு பின் பந்தலுடைய அய்யனாருக்கு குதிரை எடுப்பு விழா நடத்தப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
பூவந்தியில் பந்தலுடைய அய்யனார் மற்றும் ஒய்யவந்தாள் அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு குதிரை எடுப்பு விழா நடத்தப்படுவது வழக்கம். 25 ஆண்டுகளாக பூவந்தியில் குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்பட இல்லை. மழை வேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த செவ்வாய் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.25 ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடத்தப்படுவதால் ஏராளமானோர் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு வேளார் தெருவில் இருந்து குதிரை எடுப்பு ஊர்வலம் தொடங்கியது. முன்னதாக குதிரைகளுக்கு புதிய வேட்டி, துண்டு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின் அங்கிருந்து ஊர்வலமாக பூவந்தியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின் அய்யனார் கோயிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் குழந்தை வரம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் ஏராளமானோர் விரதமிருந்து புரவிகளை சுமந்து வந்தனர்.